போட்டதேயில்லை

புருஷன் சொல்லிப் போன வேலை செய்ய
அப்புச்சிக்கு நேரத்துக்கு மாத்திரை கொடுக்க
ஊரிலுள்ள அவள் அம்மாவின் நலம் விசாரிக்க
ரேசன் கடைக்குப் போவ
மேய்ச்சலுக்கு போன மாட்டை அழைத்து வர
சந்தையில் பேன் சீப்பு வாங்க
இப்படி எத்தனையோ வேலைகளுக்காக
முந்தானையில் முடிச்சு போடும்
அருக்காணி

போட்டதேயில்லை
ஒருமுறை கூட
அவள் பிள்ளைகளுக்காக

சித்திரை கனி



அழகிய மஞ்சள் பூக்கள்
சொன்னது என்பதற்காக
இலைகளை கைவிட்டு
இரண்டொரு நாட்களில் பூக்களையும் இழந்து
அனாதையாய் நிற்கும் அந்த மரத்தை
பார்க்கவே பாவமாய் இருக்கிறது.

சித்திரை கனிக்காக
பூஜைக்கு செல்லும் பூக்கள்
புண்ணியம் செய்தவை என
நீங்கள் சொல்லக் கூடும்

பறித்த ஒருவராவது
புண்ணியம் பற்றியோ பூஜை பற்றியோ
சொன்னீரோ  
அங்கே நிர்வாணமாய் நிற்கும்
ஆவாரம் பூ மரத்திடம்

அணில்


நேற்று பார்த்து வைத்திருந்த
ஒரு பெரிய கொய்யாவை
காணோமுங்க
இரண்டை பாதி கடிச்சி வச்சிருக்கு
இந்த அணில் தொல்லை தாங்கலை  என
முன்னெச்சரிக்கையாக
பழுக்குமுன்னே பறிக்கப்பட்ட
மூன்று    கொய்யாக்களோடு
அலறிக் கொண்டே வந்தளை நோக்கி
இந்த மூன்றைக் காணோமென நாளை
அணில்களும் பேசிக் கொள்ளும்
இனியாவது  கொய்யா மரமருகில் போகாதே
பதட்டத்தோடு பாதி கொரிக்காமல்
அவை முழுதும் தின்னட்டுமே என்றேன்.

காதலை அங்கீகரிப்போம்


காதலித்து மணமுடிப்பதில் உள்ள சுகமே தனி தான். நாம் விரும்பிய ஒரு நபருடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

காதல் எப்படி உருவாகிறது? ஒரு பெண்ணோ அல்லது ஒரு பையனோ, தங்களது சிறு வயதில் தங்களை ஈர்த்த ஒரு விஷயம் தன எதிர் பாலினத்திடம் காணும் போது, மனதில் ஒரு வகை கிளர்ச்சியை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு ஒருவரின் உடை, பேச்சு, பேசும் போது ஆடும் ஜிமிக்கி, சில குறும்புத் தனங்கள், முடி, கண்கள், மூக்கு, சிரிப்பு, கன்னத்திலோ தாடையிலோ விழும் குழி இப்படி ஏதாவது ஒரு மிகச் சாதாரண அற்ப விஷயமே அவர் பால் இன்னொருவரை ஈர்க்க வைக்கிறது. பிறகு அதுவே அவரிடம் வலியச் சென்று பழகத் தூண்டுகிறது. அதை போகப் போக காதல் என்று இருவரும் உணர்கிறார்கள். சிலர் திருமணம் வரை நகர்த்தி பெற்றோரின் சம்மதத்தோடோ அல்லது அவர்களை மீறியோ வெற்றி பெறுகிறார்கள்.

ஆக கண்டதும் வருவது தான் காதல். இருவரும் பேசி, புரிந்து, வருவது எல்லாம் காதல் அல்ல. அது கிட்டத்தட்ட பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் வழக்கமான திருமணம் போல் ஒன்றே ஆகும்.
காதல் திருமணம் புரிந்தோர் எல்லாத் தருணங்களிலும் மகிழ்வோடு தான் இருப்பர் என்று எண்ண வேண்டாம். கோபதாபங்களும் சண்டைகளும் சமரசங்களும், விட்டுக் கொடுத்தலும் அங்கேயும் இருக்கும்.

பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் எந்த திருமணம் ஆனாலும் அது வழக்கமான திருமணமாக இருக்கலாம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பெரியவர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கையில் , எந்த பிரச்சினை வந்தாலும் நம்மைச் சுற்றிய உறவுகள் நம்மை அனுசரித்து போகவே வலியுறுத்துகிறது. அங்கே பாதிக்கப்படும் நபர் பொருளாதாரத்தில் சற்று வலிமை எனில் திருமண பந்தத்தை விட்டு தைரியமாய் வெளியேறி விடக் கூடும். அப்படி இல்லை எனில் மருகி மருகி சுயசமாதானம் செய்து வாழ்க்கையை நகர்த்த பழகிக் கொள்கிறது.

பின் காதல் திருமணத்தில் என்ன வேறுபாடு என்றால், நமக்கு பிடித்த ஒரு நபரோடு வாழ்கிறோம் என்ற ஒரு மன திருப்தியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு முறை மட்டும் கிடைத்த இந்த குறுகிய வாழ்க்கையில், நமக்கு பிடித்த ஒரு நபரோடு வாழும் வாய்ப்பு கிடைத்தால் அது அவர்களின் பெரும் பேறு என்பேன். ஏனெனில் அது எல்லோருக்கும் வாய்ப்பதுமில்லை; அப்படி வாய்ப்பு பெற்றவர்களையும் இந்த சமூகம் அவ்வளவு எளிதில் அங்கீகரிப்பதுமில்லை.

நாமாவது நம் சந்ததியினரின் காதலை அங்கீகரிப்போம்.

ஏன் எதற்கு எப்படி

ஆயுத பூஜையன்று
சந்தனமும் குங்குமமும்
கணினிக்கு தடவுங்கள் என்ற போதும்

வெள்ளியன்று இரவு
பெரும் பூசனியையும் முற்றிய தேங்காயையும்
நடு ரோட்டில் போட்டு உடை என்ற போதும்

நடைபயிற்சி முடித்து
பத்து நிமிடம் எட்டு போடு என்று
நம் மருத்துவர் சொன்ன போதும்

எல்லாம் சரியாகும்
முச்சந்தி சாமிக்கு ஒரு மண்டலம்
விளக்கு போடு என்ற போதும்

கூட்டு எண் எட்டு
வாகனத்துக்கு ஆகாதப்பா என
கூறும் போதும்

எதையும் மறுதலிக்காதவர்கள்

அறிவு விருத்தியாகும்
நல்ல நூல்களை வாங்கிப் படி
எனும் போது மட்டும்
ஆழ யோசித்து
எதிர் கேள்வி கேட்கிறார்கள்