தோல்விகள்



வாழ்வின்
முதல் தோல்வி
காதல்...

கடைசி தோல்வி
மரணம்...

இரண்டுமே
பிரிவுகள் தான்....

முதலாவதில்
என்னை விட்டு நானும்

இரண்டாவதில்
என்னை விட்டு நீயும்...

முதல் காதல்


அவள்
சிரிக்கும் கண்களில்
சிக்கிய மீனாய் மனசு

காதணிகள்
குழந்தையாய்
இடுப்பசைக்க
சிறகடிக்கும் பேச்சு

மல்லி வாசத்தை
முந்தி வந்து
அவள் வருகையை
சொல்லிப் போகும்
சிகைக்காய் மணம்

வீசும் தென்றலில்
மெல்ல என் முகம்
தொடும் அவள்
துப்பட்டா நுனி

கடற்கரை மணலில்
கை கோர்த்து நடக்கையில்
கால் கொலுசு போட்ட
பிண்ணனி இசை...

காத்திருக்கும் வேளை
மனசோ
மது குடித்த
மதம் பிடித்த ஆனை

இப்படி
சிறிதும் அசையாமல்
நங்கூர நினைவுகள்...


உலகிலேயே  முடியாதது
முதல் காதலை மறக்க
முயலுவது தான் போலும்

ஆமாங்க
என
மனைவியும் சொல்ல

அன்றே
மறந்தது என்

முதல் காதல்...

பொம்மலாட்டம்


பொம்மலாட்டத்தில்
ஆட்டுவிப்பரும்
பொம்மைகளும்
அடிக்கடி
தத்தம் பாத்திரங்களை
பரிமாற்றிக் கொள்ள - இந்த
நூலில்லா பொம்மலாட்டத்தில்
மேடையோ
தொடர்பு எல்லை வரை....


தேடுகிறேன் தேடுகிறேன்


தேடுகிறேன் தேடுகிறேன்
காணவில்லை...

சொந்த பந்தங்கள்
நண்பர்கள்
அனைவருக்கும்
தனித்தனி அறைகள்...

தேடுகிறேன் தேடுகிறேன்
காணவில்லை...

சொகுசாக சிலர்
சோகத்தில் சிலர்
சமாளித்து பலர்..

இருக்கும் அறையின்
நிறை குறை
ஒப்பீடு செய்து...
எதிரில் பட்ட என்னிடம்
அள்ளி வீசினார்கள்
குற்றக் கணைகளை..

தெரிந்தும் பதில் சொல்லாமல்
தொடர்ந்தது என் தேடுதல்
காரணம்
அறைகள் ஒதுக்கியது
நானல்ல..
சாவிகளின் தேர்வு
அவர்களே..

இன்னும் ஏராளமாய்
சொகுசான அறைகள்
திறக்காமலேயே....

கடைசிவரை
மனசின்
எந்த அறையிலும்
காணவில்லை...


நான்

வழிப்பறி கொள்ளை


கோடிக் கணக்கான
குதிரைகள்
வரிசை கட்டி
நிற்காமல்
நடக்க...

முதுகில்
இரண்டு மூட்டைகள்...

ஒன்று தங்கம் 
இன்னொன்று தகரம்

புரிந்து கொண்டேன்

அபகரித்தால்
இரண்டுமே
சுமைகள் தான்
இனியும்
எடுக்கப் போவதில்லை
எதையும்...

வழிப்பறி கொள்ளையை
நிறுத்தி விட்டேன்
நேற்றோடு...

குதிரைகளின்
குளம்பொலி தாளத்தை
தூரமாய் நின்று
மனம் சலனமின்றி
இரசிக்க....

நிமிடக் குதிரைகள்
மூட்டைகள் குறையாமல்
என்னைக்
கடந்தது...

போரைத் தொடர  சுகமே..


உன்னை வென்று மீள
கையில் எடுத்த
ஆயுதம் தான்
கவிதை....

வென்று வா வென
வாழ்த்துவது மட்டுமல்ல
களத்தில் ஆயுதம்
கை நழுவும் போதெல்லாம்
கனிவுடன் தீண்டி
கையில் எடுத்து
கொடுப்பதும் நீயானால்

ஒன்று மட்டும் நிச்சயம்
வெற்றி எனக்கில்லை
எனினும்

போரைத் தொடர  சுகமே..

பங்காளிச் சண்டை



பங்காளிச் சண்டை
பற்றி எரிகிறது
ஊர் மட்டுமல்ல
பெற்ற என் வயிறும் தான்...

சமாதானம் செய்தே
சளைத்து விட்டேன்....
வாழ்நாள் பாதி
கழிந்ததது தான் மிச்சம்
சண்டை ஓய்ந்தபாடில்லை
தொடர்ந்து தொடுது உச்சம்....

ஊரே கூடி நின்னு
வேடிக்கை தான்
பார்க்குதே ஒழிய
ஒன்று கூடி
நெருங்கி வந்து
நீதி சொல்ல தயங்குது...

கதிரவன் நகரில்
அமைதி திரும்ப
ஆகுமாம் இன்னும்
ஆண்டுகள் சுமார்
நானூற்றி அய்ம்பது கோடி...


சோதிடர்கள்  கணிப்பு.....

நான் யார் ....





கோவிலுக்கு தினம் போவேன்
ஆத்திகன் அல்ல...

கடவுளை வணங்கியதில்லை
நாத்திகன் அல்ல...

சங்கேத மொழியில்
சம்பாஷணை....
தீவிரவாதி அல்ல....

வெடிக்க காத்திருக்கும்
நான் மறைவாய் வைத்த
குண்டுகள்...
பயங்கரவாதி அல்ல...

நான் யார் ....

ஆழ்ந்த யோசனையில்
மெல்ல நுழைந்தது
சிறகு ஒன்று .....

கோபுரத்திலிருந்து
கூட்டமாய் புறாக்கள்
பட பட வென
இறக்கை உதறி பறந்த போது .....

தளரவில்லை தணிகாசலம்


எத்தனை முறை
வெட்டினாலும்
வேரோடு
பொசுக்கினாலும்
காடாய் வளருதே
கர்வம்....

என்ன சாமி செய்ய ...

படியேறி கேட்டேன்
பழனி மலை
முருகனிடம்....

பதில் இல்லை...

தந்தைக்கே உபதேசம்
செய்தவனே...
மௌனம் கலைவாய்

எப்படி சொல்வேனடா

இப்படி
உசுப்பேற்றி உசுப்பேற்றியே
ஒன்றானவனை
பல கோடி கூறாக்கினாய்...

மயக்கத்தில்
பதிலை மட்டுமல்ல - இப்ப
கேள்வியையே
தொலைத்து விட்டு
கேட்பாரற்று நிற்கிறேன்
தனிமையில் நான்...

தளரவில்லை
தணிகாசலம்
விடை காண விரைந்தார்

திருப்பதி நோக்கி.....

கல்யாண சமையல் சாதம்




கல்யாண சமையல் சாதம்
காய்கறிகளும் பிரம்மாதம்
கௌரவப் பிரசாதம்
இதுவே எனக்குப் போதும்
இன்பமாய் பாடி மகிழ்ந்தது...

குமுதா வைத்த
இட்லி மாவு
குளிர்சாதன பெட்டியிலிருந்து....

விளங்கியதோ இல்லையோ


நீயும், நானும் ஒண்ணு
சொல்லி நகர்ந்தது
நத்தை

கோபத்தை அடக்கி
எப்படி
என்றேன்....

உடலமைப்பு வேறு வேறு
இருந்தும்
ஒரு தாய் வயிற்று
பிள்ளைகள் நாம்...

புரியலையே...

நீ கனி எனில்
நான் இலை
பூமி என்கின்ற
பெரு மரத்தில்....

விளங்கியதோ இல்லையோ
கொஞ்சம்
தொலைந்தது மமதை...

.உன் நினைவுகளுக்குள்


கடலுக்குள் மீனா
மீனுக்குள் கடலா

இழுத்து சுவாசிப்பதாலேயே
எனக்குள் கடல்...
இறுமாப்புடன் கூறி
நீந்தியது மீன்....

சட்டென புரிந்தது
என்னுள் உன் நினைவுகள்
முற்றிலும் தவறு
உன் நினைவுகளுக்குள்
உலவும் மீனாய் நான்...

வரவு எட்டணா


வரவு எட்டணா
செலவு பத்தணா
இருந்தும்
சிணுங்கவில்லை
சித்ர குப்தன்..

வருது வருடுது போவுது


வான், நிலா 
மலை, அருவி 
மழை, மழலை 
கடல், காற்று 
தமிழ், கவிதை 
வருது வருடுது போவுது 
எதுவும் நிற்பதில்லை 
என்னோடு நிரந்தரமாய் 
உன் நினைவுகள் போல்....

புலன் விசாரணை


புலன் விசாரணை
பின்னணியில் யார் யார்
காட்டிக் கொடுக்கவே இல்லை
கடைசி வரை
ஐம்புலன்கள்
மனசை...

மரணத்தின் வாயில்



தெருவில் விழுந்தோ
தெய்வத்தின் மீது
வழிந்தோ
வாழ்க்கை முடிந்தாலும்
பரவாயில்லை
பசியைப் பார்க்காமலேயே
பயணம் முடிகிறதே
முணுமுணுத்தது
மரணத்தின் வாயில் பால்.....

அழகான ரோஜாப்பூ



அனைத்து ரகச் செடியிலும் 
வந்ததெப்படி ஓர் 
அழகான ரோஜாப்பூ 
அனேகமாய் 
முப்பத்திரண்டு 
முட்களோடு....

ஒற்றைக் கயிற்றில்


மேலிருந்து கீழாக
ஒற்றைக் கயிற்றில்
அபாரமாய் நடந்து
வித்தைக் காட்டுது
மெழுகுவர்த்தி தீபம்....

காவலாளியின் வணக்கத்தை


அலைந்தே திரிந்து
விரும்பி வாங்கிய
பூச்செடி - நித்தம்
பூத்துக் குலுங்கி
வெளியில் போகும் என்னை
மனைவியைப் போல்
பார்த்துச் சிரித்தாலும்
காவலாளியின் வணக்கத்தை
கர்வத்தோடு கடப்பது போல்
நான்...

பரம்பரைச் சொத்து


பரம்பரைச் சொத்து தான்
பாதுகாக்க வேண்டாவா

எத்தனை முறையடா
சொல்வது
தேவையில்லாத போது
கதவுகளை மூடென்று...
குப்பையாய் வீடு...
ஏவலாளியை திட்டிக் கொண்டே
எழுந்தார் ஏகாம்பரம் ....

ஒன்பது கதவுகளையும் மூட ...

சன்னலோரத்தில்


மலையளவு
தடை வரினும்
மனம் உடையாமல்
போகுது பார்த்தாயா....
மேகப் பேருந்தில்
பயணத்தோடு
பாடமும் கற்றுக் கொண்டது
சன்னலோரத்தில் அமர்ந்த
இரண்டு மழைத் துளிகள்..

எரிமலை வாய்கள்













வந்த இடத்தில்
வீண் சண்டை ஏன்

எரிமலை வாய்கள்
சரியென ஓய
இடம் அமைதி

வந்த இடம் என
அவர் சொன்னது
பூமியையோ

மனமும் அமைதி....

அப்பாவின் உயிரே நான் தான்


அப்பாவின்
உயிரே நான் தான்...

முதல் நாள் பள்ளி
சேர்க்கையின் போதும்
முகூர்தத்தின் போதும்
அவர் உடலின் நடுக்கம்
உணர்ந்தேன்

ஆண்டுகள் உருண்டது..

கணவனே என் உலகம்
அவன் உலகத்திலோ...
நெரிசலில் நான்.

ஆண்டுகள் உருண்டது..

உறங்கும் வேளை
உதட்டை சுழித்து
சிரிக்கும் பிள்ளையின்
கனவில் நானே என்று
கனவில் மிதக்கும் நான்...

பிள்ளைக்காகவே
நான்...

ஆண்டுகள் உருண்டது..

அம்மா பாவம்ப்பா
அன்பா சொல்லுங்க
திட்டாதீங்க...
அப்பாவிடம்
விண்ணப்பம்....

ஆண்டுகள் உருண்டது....

மருமகளும், நானும்
ஒரே வீட்டில்...
எங்கள் மனசோ
முள்ளின் பார்வை வேண்டி
தராசின்
எதிரெதிர் தட்டில்....

ஆண்டுகள் உருண்டது..

அப்பாவின் செல்லமாமே நீ
அவளை பிடித்து
அரவணைத்துக் கொஞ்ச

போங்க பாட்டி
பெருமையுடன்
பிடி விலக்கி...

பழைய சக்கரம் ஒன்றை
ஓட்டிச் சென்றாள் பேத்தி....

சிரித்துக் கொண்டேன்
சக்கரம்
உருள்வதைப் பார்த்து....

சட்டத்தின் முன்னால்

சட்டத்தின் முன்னால்
சட்டத்தின் முன்னால்
அனைவரும் சமம்...
சிலர் மட்டும்
பின்னால்....

வானின் பின்பக்கம்

வானின் பின்பக்கம்

வானின் பின்பக்க
வண்ணம்
வெள்ளை தான் அப்பா

ஆச்சரியமாய்...
எப்படி கண்டு பிடித்தாய்

அதோ அந்த
ஓட்டை
வழியாகத் தான் என்று

நிலவைக் காட்டினாள்
பெருமிதத்துடன் ...

கொடுப்பதே இன்பம் 














திறந்த பெட்டியில்
நிறைந்த பணம்
நிரப்பியது யார்

கையில் சிக்காமல்
காற்றில் பறக்குது..

எங்கு விழுந்தாலும்
என்னையே சேரும்
கொடுப்பதே இன்பம்

சொல்லாமல்
சொன்னது
கடல் அறக்கட்டளை

புதரில் புலிகள்... 

புதரில் புலிகள்
அடர்ந்த காடு
மரங்களில் மந்திகள்....
மேயும் மான்கள்...
வியுகம் வகுத்து
புதரில் புலிகள்...
தாவும் முயல்கள்....
தந்திரத்தோடு நரிகள்...
தாகத்துடன் யானைகள்...
தயாராய் முதலைகள்...

அதிசயம்
தாக்குதல்கள்
அறவே இல்லை....

வெளியே வந்தேன்
வீதியில் நடந்தேன்....

எதிரில்
காடு
மிருகக்காட்சி சாலை
சர்க்கஸ்
மறைத்து நடந்த படி
மனிதர்கள்..

தனிமையே பரிசு

படம் பார்த்து கவிதை சொல்லுங்கள் - போட்டிக் கவிதை - தனிமையே பரிசு
வாழ வந்தோம்
வாழ வைத்தோம்
கடைசியில்
தனிமையே பரிசு
மௌனமாய் நான்
மனித குலம் முன்
நான் சிறிசு ....
நீயோ அக்குலத்தின் வித்து
எழுந்து நில்
எதிர்த்து நில்
மனம் திறந்தது மரம்
மங்கையிடம் ....

காதலுடன் பார்த்து 

காதலுடன் பார்த்து
இலுப்பிக் கொள்ளாமல்
பூசிக் கொண்ட
இதழ்களின் வண்ணத்தில்
இதயம் வழுக்க...

வெட்கம் விட்டு
சுற்றம் மறந்து
கிட்டே செல்ல...

முழு உடல் சிலிர்க்க
முகத்தில் சிறு உரசல்
முற்றிலும் ஆனது ஈரம்...

முந்திக் கொண்டு தந்த
முத்தமோ

வெட்கத்தில் அவள்
சற்று
விலகிச் செல்லும் போது
வீசி எறிந்த பனித்துளிகளோ....

குழப்பமாய் நிற்க

தலைத் துவட்டி
வாரி அணைத்து
என்னை
தூக்கி நடந்த போது
அவனுக்குத் தெரியாது
பூங்காவிலிருக்கும்
பூக்களை
காதலுடன் பார்த்து
கை அசைக்குது மனசு என்று ...

யார் வீட்டுப் பெண்ணோ அல்ல.. 

யார் வீட்டுப் பெண்ணோ அல்ல

கன்னி வெடிகள்
புதைத்து
மிதி படுமோ
ஆவலில்
வீட்டில் சில
மெட்டிகளும், மீசைகளும்
வெட்டியாய் காத்திருக்க
இவர்களிடம் யார் சொல்வது
வருவது
யார் வீட்டுப் பெண்ணோ அல்ல..
நிறை குறை பாராமல்
நெஞ்சார வாழ்த்துங்கள்...

நம் பிள்ளையோடு வரும்
மதிப் பெண்ணை....


(இன்று +2 முடிவுகள் ----- 07-05-2015)

கொலுசு

கொலுசு

விரைவில்
புதிய கவிதைகள்
கொலுசு ஓசையில்
மனச வருட போவுது ...
எல்லோரும்  அதில்
மணி கட்டலாம்
கூட்டணியாக ....

===================
படைப்புகள் அனுப்ப வேண்டிய முகவரி
kolusu.in@gmail.com
மு. அறவொளி
9486105615

பேசி நாளாச்சி

பேசி நாளாச்சி

காதல் வந்துச்சி
பேசி நாளாச்சி....



என்னுடன் நான் .

மரத்தின் வலிகள்

மரத்தின் வலிகள்
ஆணியடித்து
மாட்டினார்கள்....

விடுமுறைக் கால
சிறப்பு பயிற்சி
விளம்பரங்கள்...

வலித்தது
ஆணி இறங்கிய போதும்
விடுமுறை, உறவுமுறை
இழந்த குழந்தைகள்
என்னைக் கடந்த போதும்

குடுமிப் பிடி சண்டை

குடுமிப் பிடி சண்டை
தினம் தினம்
வீட்டில்
குடுமிப் பிடி சண்டை

இன்றும்
அவளுக்கே
வெற்றி

தேங்காய்
சரி பாதியாய்
உடைய.....

காதல் திருமணம்

காதல் திருமணம்
காதல் திருமணம்

வந்தது
குழந்தைகள்

போனது
கவிதையும்
காதலும்

வீதியில் சாமி உலா

வீதியில் சாமி உலா
ஏழெட்டு விண்ணப்பங்களும்
பதிலுக்கு
பூ முடி, தீ மிதி
அங்க பிரதட்சனை
பட்டியலோடு
பக்தியுடன் வாசலில்
சிவகாமி...

வீதியில் சாமி உலா
அதிர் வேட்டுக்கள் அதிர

பூசையறையில்
ஊது பத்தியின்
ஒரு சாம்பல் துகளில்
உறங்கிக் கொண்டிருந்த
இறைவன்
என்னடா சத்தம் என்று
புலம்பி விட்டு
புரண்டு படுத்தார்....