கொடுப்பவன் கடவுள்


கொடுப்பவன் கடவுள்
இரப்பவன் மனிதன்

இன்றே நாமும்
இறைவனாக
முயற்சிப்போமே...

எண்ணலாம்..
இருந்தால் தானே
கொடுப்பதற்கு

எல்லையில்லாமல்
எல்லோருக்குள்ளும்
அன்பு பாசம் கருணை
அறிவு ஆதரவு
மனித நேயம்
இப்படி இன்னும் பல....

இதை எடுத்துத் தான்
கொடுப்போமே....
இன்றிலிருந்து நாமும்
இறைவனாக

முயற்சிப்போமே...

பலத்த மழையால்


பலத்த மழையால்
பிணை எடுக்க வரும்
கதிரவன் தாமதமோ....

பினாத்திக் கொண்டிருந்தது
குளிர் சாதன சிறையில்
குந்தியிருந்த

பனிக்கூழ்மம்...

யோகா செய்யுங்கள்....


மனசு அழகாகும்
முழுசா அமைதி பெறும்
யோகா செய்யுங்கள்....

செய்ய மறுப்பவர்கள்
கடலில் 
தூக்கி  வீசப்படுவார்கள் 
எச்சரித்தார் யோகி...

ஒரு தலைக் காதலில்


இறகுகளை
முதலீடு செய்து
மகிழ்ந்து பறக்கும்
ஈசல்கள் போல்
ஒரு தலைக் காதலில்

நான்..

ருசிக்காத காபியை


பசிக்கவில்லை
இருந்தும்
நுழைந்தேன்
பெரிய உணவு விடுதி...

ருசிக்காத காபியை
இரசித்து இரசித்து
குடித்தேன்

கைப்பேசி சற்று
பசியாறும் வரை


மின்சாரத்தை.....

செடி கொடி மரங்களும்


விண்ணிலும்
மண்ணிலும் நீண்டு
விடாது தேடுது
அகத்திலும்
புறத்திலும்
அன்றாடும் தேடும்
மனிதனைப் போல
செடி கொடி மரங்களும்

கடவுளை....

இது தான் உறுதி


இது தான் உறுதி என
ஆளுக்கொரு
விழுதைப்
பிடித்துக் கொண்டு
விடாமல் தொங்க...

அன்றும்
முடிவு எட்டப்படாமலேயே
முடிந்தது கூட்டம்...

சுமை தாங்கும் பிள்ளைகள்


ஒரு தாய்ப் பிள்ளைகள்
ஒருவர் தோள் மீது
ஒருவர் ஏறி அமர...
மனித மரம் வளர்ந்தது.

நகரந்து விடாதே என
எல்லோரும்
தன் கீழுள்ளோனை
எச்சரிக்க...

விளையாட்டை
இரசிக்கும்
அம்மாவுக்கோ
அச்சம் கலந்த கவலை....

சுமைகள் அத்தனையும்
ஊமையாய் ஏந்தி
கால்கள் தள்ளாட
கடைசியில்  நிற்கும்
மகன் மீதல்ல...

சுமைகள் ஏதுமின்றி
சுகமாய்
உச்சியில் உள்ள மகன்
எங்கே
விழுந்திடுவானோ என
அச்சப்பட....

இப்படிப்பட்ட
அம்மாக்காள் தேவையா

சுமை தாங்கும் பிள்ளைகள்
முடிவு செய்க
மதம் சாதிய உறவுகள்

மண்ணோடு போக...

நல்லவன்னு சொல்லிக்கிட்டு


நல்லவன்னு
சொல்லிக்கிட்டு
நடிப்பதுவோ கடினம்

கெட்டவன்னு
எழுதி ஒட்டிக்கிட்டு
கெடுப்பதுவோ  எளிது

புகைப் பூஞ்சுருளும்
மதுக் குப்பியும்
நட்புடன் போதித்தது

நூடுல்சிடம்....

அள்ளிக் கொடுங்கள்


திருப்பி கிடைக்குமோ
என்ற அச்சம்
எள்ளளவும் வேண்டா
அள்ளிக் கொடுங்கள்
எல்லோருக்கும்            


புன்னகையை....

இரவின் குழந்தைகள்....


வீட்டுக்குத் தெரியாமல்
வீதியில் இறங்கி
பயமின்றி
விளையாடுது
இரவின் குழந்தைகள்....

நிழல்கள்

வட்டங்களுக்கு இடையே வாக்குவாதம்


இரண்டு வட்டங்களுக்கு
இடையே வாக்குவாதம்
எது சிறந்தது என ...

ஒன்று
குடும்பத்தையே
மையம் கொண்ட
சுயநல வட்டம்

இன்னொன்றோ
இனம் மொழி தேசம்
மையம் கொண்ட
பொதுநல வட்டம்

மனிதம் உலகம் என்ற
மையம் கொண்ட
மூன்றாவது வட்டம்
வந்த போது
முரணாய் இருந்த
முதலிரண்டு வட்டங்களும்
கூட்டணி அமைத்து ஒன்றானது....

புதிய  
இரண்டு வட்டங்களுக்கு
இடையே வாக்குவாதம்

தொடர்ந்தது....

உயிர் பிரதி



வண்ண வண்ண பூக்கள்...

கண்கள் வாய்பிளந்து
பிரதி எடுத்து
களவாட....

வண்ணத்துப் பூச்சியொன்று
முழுச் செடியையும்
உயிர் பிரதி எடுத்து
டியது..

அதன்
பின்னங்கால்களில்
ஒரு மகரந்தத் துகள்.....

ஆமாம்
பூமியின்

மகரந்தம் எங்கே

கொட்டுது மழை...


கொட்டுது மழை...

கால் நனைத்து
நடந்து செல்லுது
கதிரவன்...

வான் வீதியில்
வழிந்தோடுது
மழை நீர்
மேகங்களாய்...

கடல் பெய்த
மழையால்

வான் நோக்கி....

கைப்பந்து விளையாட்டு


கைப்பந்து விளையாட்டு

எங்கள் அணியே
எப்போதும் வெல்லும்
இருந்தும் இன்று
மூர்க்கமாய் இருஅணிகளும்
மூச்சிறைக்க விளையாட...

பந்து கீழே விழாமல்
தொடர்ந்து
வந்த வேகத்திலேயே
திருப்பி அனுப்புகிறான்
திறமையாக எங்கள்
மூக்கையன்....

எப்போதும் போல்
முடிவில் எதிராளியே
பந்தை தவற விட
வெற்றி எமக்கே...


மரணம்...

பாட்டன் முதல் இவன் வரை


பாட்டன் முதல் இவன் வரை
கிட்டே வந்து சொன்னாலும்
எதுவும் புரியவில்லை
இன்று வரை...

புரிந்ததா என அவனும்
புரியலை என நானும்
கூறிக் கொண்டதே இல்லை என
பொன்னுசாமியின்
கழுத்தில்
தொங்கிக் கொண்டிருந்த
கணேசனிடம்
சுப்பிரமணி சொல்லியதை 
அர்ச்சகர் கேட்டிருக்க
வாய்ப்பே இல்லை...

சித்திரமும் சிற்பமுமாய்


தேவையானவற்றை
சேர்த்தால்
சித்திரம்....

தேவையில்லாதவற்றை
விலக்கினால்
சிற்பம்...

அன்பே...
இரண்டுமாய் 
என்னுள்ளே நீ...

எல்லோரையும் தழுவி












சாதி மதம்
இனம் நிறம்
ஏற்றத் தாழ்வு
எதையும் பார்க்காது
எல்லோரையும் தழுவி
வாழணும்
மரணத்தை போல்....

கடவுளே சொன்ன மாதிரி...


அப்பா
கடவுளைப் பற்றி
ஆராய்ச்சி செய்தேன்
ஆனந்தமாய் ஆனந்தி....

ஒரு பொருள்
எங்கும்  உண்டு
என்பதும்
எங்கும் இல்லை
என்பதும்
ஒன்று தானே அப்பா

புரியலையே ஆனந்தி

எதன் ஒன்றின் இருப்பும்
அதன்
இல்லை என்ற எல்லை
தொடங்கும் போது தானே..

எப்படி

நமக்கு
எப்ப தெரிய வந்தது

வெளிச்சம்....
இருள்
தொடங்கிய இடத்தில்

உண்மை...
பொய்மை
தொடங்கிய  இடத்தில்


நன்மை...
தீமை
தொடங்கிய  இடத்தில்


வளி.....
வெற்றிடம்
தொடங்கிய  இடத்தில்

கடவுள்....
எது தொடங்கிய இடத்தில்

முடிவாய் என்ன தான்
சொல்ல வருகிறாய்
கடவுள்
உண்டா இல்லையா

இல்லை என்றால்
இருக்கு என்பதன் எல்லை
சொல்ல வேண்டி வரும்...

எங்கும் நிறைந்துள்ளார் கடவுள்
என்பது
உறுதியாய்  தவறு....

என்ன சரியாப்பா

ஆனந்தி கன்னம் கிள்ளி
அப்பா சொன்னார்

நீ சொன்னா - என்
கடவுளே சொன்ன மாதிரி...