தேடல்


இரை தேடச் சென்று
திரும்பிய பறவை
வாழ்ந்த
மரம் தேடியது

கொஞ்சம் கோபம் தவிர்


நிராகரிக்கலாம்
நின் உரிமையது

மனதில் மலர்ந்த
கனிவான உன் முகத்தை
கலைத்துப் போட உனக்கும்
உரிமையில்லை

ஆதலால்
கொஞ்சம் கோபம் தவிர்த்து
அன்பாய் மறுத்துப் போ
இவன் காதலை

மலையின் மகரந்தத்துகள்


மறைந்து உறங்கும்
சிற்பங்களில் சில
சற்றே புரண்டு படுக்க
மலை தனது
மகரந்தத்துகளை
தவறவிட்டது காற்றில்
மணலாய்

வேண்டியது


இடுப்பில் முளைத்த
பிஞ்சுக் கால்கள்
இறங்கி வந்து தீண்ட
வேண்டியது
பழனி மலை

கொஞ்சம் மிச்சம் வை


என்னை மறுசீரமைப்பு
செய்து கொள்ள வேண்டும்
உறிஞ்சியது போதும்..

கொஞ்சம் மிச்சம் வை
என் தனிமையை 

அனல் பறக்கும் விவாதம்


கடவுள் இருக்கா இல்லையா
அனல் பறக்கும் விவாதம்
அடங்கும் முன்னே

போட்டிப் போட்டு குழந்தைகளாய்
அடுத்த நாக்கு ஊஞ்சல்களில்
ஆடப் புறப்பட்டுப் போனது

சூடான எழுத்துக்கள்
இன்னும் சூடாவதற்கு 

மறப்பதற்காக உன்னை


மறப்பதற்காக உன்னை
நான் தேர்ந்தெடுத்த
மாற்றுப் பாதைகள்
அனைத்தும்

கூட்டி வந்தது உன்னிடமே

தலையாட்டி தலையாட்டி


குழந்தையின் விரல் பிடித்து
குதுகலமாய் ஒரே மூச்சில்
முழுத் திருவிழாவையும் இரசிக்குது
தலையாட்டி தலையாட்டி
ஒரு மஞ்சள் பலூன்

கொஞ்சிக் கொஞ்சி


சிந்தாமல் என அப்பாவிடமும்
சீக்கிரமாய் என அம்மாவிடமும்
சுத்தமாய் என அண்ணாவிடமும்
அதிகாரமாய்ச் சொன்ன யாழினி

பொம்மையை மட்டும் மடியில் வைத்து
கொஞ்சிக் கொஞ்சி
கதைச் சொல்லி ஊட்டினாள் தன்
கனவு சமையலறையிலிருந்து...

மான் கூட்டம் புலியைத் துரத்த


மான் கூட்டம் புலியைத் துரத்த
சிட்டுக்குருவி சிங்கத்தின் பிடரிக்குள்
புகுந்து விளையாட
கரடி கழுத்தில் குரங்கொன்று
பேன் பார்க்க
முதலையின் முதுகில்
முயல் குட்டி பயணிக்க....


சாப்பிட வாடி என்ற அதட்டலில்
யாழினியின் காடே
அதிர்ந்தது..

மரணத்துக்குப் பின்


உடன்கட்டை ஏறிய தன்
இணையை நினைத்து
மரணத்துக்குப் பின்
காதலித்தது
காதறுந்த ஒரு செருப்பு

மரம்

நல்ல காற்று நேரடி மழை
மேலோகத்தில் கிடைக்குமென
வெக்கை புழுக்கம் தாளாமல்
வெளியே வர விசும்பும்
வேர்களையும்

மாசு படா காற்றும்
தூசு கலக்கா நீரும்
கீழே கிடைக்குமென ஏங்கும்
கிளைகளையும்

மௌனமாய் அரவணைத்துக்
கொள்கிறது
மரம்

பார்த்துக் கொண்டிருந்தார்கள்


உண்டியல் வைத்து
உள்ளே பசியறியாதவன்
ஒருவனும்

உடைந்த பாத்திரத்தோடு
வயிறு காலியாய்
வாசலில் பலரும்

பாவம் செய்தவர்களின்
வருகையை ஆவலுடன்
பார்த்துக் கொண்டிருந்தார்கள்

அச்சுறுத்தப்படுகின்றன

அச்சுறுத்தப்படுகின்றன
ஆணிவேர்கள்
மண்ணுக்கடியில் தொங்கும்
அனகொண்டாக்கலாள்...
ஆழ்துளை குழாய்கள்

நெருப்புச் சூரியன்


எத்தனை கோணத்தில் இருந்து
முயற்சித்தாலும்
நெருப்புச் சூரியன்
விரட்ட முடியாது
என் நிழலை

பறக்குது


கவ்வி வந்த
சந்தோசங்களையும்
துக்கங்களையும்
கூட்டில் கொட்டியது போக
மீதியை தூக்கிக் கொண்டு
பறக்குது வானில் ஓர்
அலுமினியப் பறவை

வழி மறந்து


வழி மறந்து
நிற்கின்றன
மலை ஏறிய
பாறைகள்

பகைமை பாராட்டாமல்


நான்கு வழிச்சாலையில்
நடுவில் நிற்கும்.அரளிப் பூக்கள்
புகையைத் தள்ளும் பேருந்தோடு
பகைமை பாராட்டாமல்
சன்னலோரக் கண்களோடு
கொஞ்ச தூரம்
சேர்ந்தே பயணிக்கிறது

பரிசுகள்


பரிசாக்கப்பட்ட
குழந்தை பாலகன்
விடலை இளைஞன்
முதுமை இப்படி
எந்த பருவத்துக்கும்
பரிபோன பின்னேயே
பாராட்டுக்கள் பெற்ற
காலம் அவனுக்கு
கோபத்தில் கொடுத்து விட்டு
போனது மரணத்தை

பாவங்கள் கூட்டப்படும்

கடைசியாக
கிராமத்திலிருக்கும் எனக்கும்
கருணை காட்டப்பட்டு
கோட்டு சூட் மாட்டப்பட்டது

இனி
கம்பீரமான என் மீது
கனரக முதல் இலகுரக
வாகனங்கள் வரை
எளிதாய்ச் செல்லும்

சந்தைக்குப் போகும்
சைக்கிள்கள் அப்பாக்களை
சங்கடப்படுத்தாது

பனை உருளை வண்டிகள்
பிஞ்சுப் பாதங்களை
வேகமாய் இழுத்துச் செல்லும்

என்னுள் புதைத்து
சற்று இளைப்பாறிச் செல்லும்
மாடுகளின் குளம்புகளில்
லாடங்கள் அடிக்கப்படும் போது மட்டும்
என் கம்பீரம் மீது
பாவங்கள் கூட்டப்படும்

முத்தமிட எத்தனிக்குது


கண்கள் கூட தீண்ட மறுக்கின்ற
அந்த குப்பை பொறுக்கியை
பொறுக்க குனியும்
ஒவ்வொரு முறையும்
முத்தமிட எத்தனிக்குது
சுத்தமாகும் பூமி

கடைசியில் மீந்ததை


கடைசியில் மீந்ததை
தானே எடுத்துப் போட்டு
சாப்பிடும் நேரத்தில்
ஓட்டலில் வேலை பார்க்கும்
சிறுவன்  கணேசனும்
அம்மாவாகிப் போனான்.
தூரத்து குக்கிராமத்தில்
தூங்காமல் ஒரு தாய்

புரண்டு கொண்டிருந்தாள்

அப்பத்தா


மகன்கள் மகள்கள்
பேரன் பேத்திகள்
சில சமயம் கணவன் என 
அலுக்காமல் ஊட்டிய அப்பத்தா கை
தன் வாய்க்கே ஊட்ட
தடுமாறுது இப்ப...