யாரோ ஒருவனின்




யாரோ ஒருவனின்
பக்தியை நிருபிக்க

யாரோ ஒருவன்
கருணை பெற்றிட

யாரோ ஒருவன்
காசு பார்த்திட

அதிகாலையிலேயே
கருணையின்றி அறுக்கப்பட்ட
வாழைக் கன்றுகள்
சந்தைக்குப் போகுது
வழியெங்கும்
வெண் குருதி சிந்தியபடி

சாமரம் வீசிக்கொண்டிருந்தது

https://mmi617.whatsapp.net/d/3AL3rwldNt-JhmVZpQqx-lYeFOY/

உறங்குகிறதோ என
எண்ணிக் கொண்டு
சாமரம் வீசிக்கொண்டிருந்தது
ஆறாவது வாகனம்
அந்தப் பறவையின் மீது
ஏறிக் கடந்த பின்னும்
அதில் ஒட்டிக் கொண்டிருந்த
மிச்சம் மீதி சிறகுகள்

கிழமைகள்



குழந்தைகள் உலகத்தில்
ஞாயிறே போற்றப்படுகிறது

பள்ளிக்கூட மணிகள்
தியானத்தை வெறுத்து
திங்களையே நாடுகிறது

ஆசையாய் ஞாயிறை வரவேற்று
அதிகமாய் ஏமாந்து போவது
வீடுகளில்
அம்மாக்கள் தான்

அலுவலகங்களில்
வெள்ளிக் கிழமை வேலைகள்
பெரும்பாலும்
தள்ளியே போடப்படுகின்றன

கிழமைகள் பார்த்து
மசூதி ஆலய தேவாலய
வாசல்களில் கருணைகள்
பரிசோதிக்கப் படுகிறது

கீழே இப்படி
கிழமைகளே மனிதனை
வழி நடத்திக் கொண்டிருக்க

மேலே எதற்கும்
கவலைப்படாத காலதேவன்
எல்லோரிடத்திலிருந்தும்
ஒரு நாளை மும்முரமாய்
கழித்துக் கொண்டிருந்தான்

போலியாக

















வீட்டில் கல்யாண பேச்சு
விதைக்கப்பட்ட போதே

வெட்கமாய் வேண்டாமென
போலியாய்ச் சொல்லி
அறைக்குள் நுழைந்தாலும்
எனது செவிகள்
பெரும் பசியில் வாடியது

புகைப்படங்களாய் வந்த
மாப்பிள்ளைகளுக்கு
முகமறியா ஒருவனின்
முகத்தைப் நானாய்
பொருத்தி வைத்து விட்டு
புடிச்சிருக்கு என
போலியாய்ச் சொல்கிறேன்

அக்கா உங்களுக்கு
கல்யாணமாமே எனும்
பொடிசுகளை
போலியாய் அதட்டி அவர்களிடமே
வலியப் போய் பழகினேன்
இன்னும் ஏதாவது
சொல்ல மாட்டார்களா என

எல்லாம் முடிந்து
புகுந்த வீடு போகும் என்னை
வாழ்த்தாமல்
வாரி அணைத்து
அழும் அம்மாவுக்காக
அழுதேன் நான் போலியாக

நாளைய வாழ்க்கையே
மகிழ்ச்சியென நகர்ந்த எனக்கு
கற்றுக் கொடுத்து விட்டேன்
போலியாகவேணும்
நாலு பேர் முன்னே இன்று
மகிழ்ச்சியாய்  இருப்பதற்கும்

அதிலும் குறிப்பாக
என்னை இங்கு
அனுப்பிய ஜீவன்கள் முன்னால்

நிலவுக்குள் எப்படி நிலவென



உன்னிடம்
நெறைய நெறைய பேசணும்

என் சன்னல் வழியாய்
நீ அனுப்பி வைத்த
பட்டாம் பூச்சிகளைப் பற்றி

உன் பெயர் சொல்லும்
போதெல்லாம் அவை
தூவும் பல வண்ணங்கள் பற்றி

அவை அமரும் இடமெல்லாம்
வித விதமாய் பூக்கள் பூக்கும்
வினோதம் பற்றி

நேற்றைய மாலைப் பொழுதில்
அவை என்னை பெரிய
பட்டாம்பூச்சியாக்கியது பற்றி

சரி, இந்தக் கவிதையை நீ
படித்தது போதும்
எழுந்து வந்து ஏறிக் கொள்
உன் தோட்டத்தில் தான்
காத்திருக்கிறேன்

நிலவுக்கு பின்புறம் போய்
நிம்மதியாய் உட்கார்ந்து
இன்னும் நெறைய நெறைய பேசுவோம்

நிலவுக்குள் எப்படி நிலவென
கவிஞர்கள் கீழிருந்து
விடிய விடிய கவிதை எழுதி
காகிதங்களெல்லாம்  தீர்ப்பதற்குள்

உன்னைப் பார்த்த மழை


உன்னைப் பார்த்த மழை
உற்சாகத்தோடு வந்திங்கு
உன் நலம் சொன்னது

ஒவ்வொரு துளியிலும்
எடுத்து வந்த
உன் முகம் காட்டி
என் ஆயுள் கூட்டியது

குழந்தையாய் நீ
உருமாறிடும் நேரத்தில்
குனிந்துன் குழி விழும்
கன்னம் தீண்டியதையும்
வெட்கத்துடன் சொல்லியது

இன்னும் சொல்லேன் என
எவ்வளவோ கெஞ்சியும்
கொஞ்சமும் நிற்காமல்
மேற்கு தொடர்ச்சி
மலையைத் தாண்டி
மறைந்தது மழை

பொறாமையுடன் அதைப்
பார்த்த படியே நான்

பாதை சரியில்லை


பாதை சரியில்லை
போய்த்தான் ஆக வேண்டும்
கோபத்தையும் எரிச்சல்களையும்
கூட வருவோரிடம் கூட
கொட்டிக் கொண்டே வருகிறேன்
அங்கே என் அப்பாவின்
காலடித் தடங்களைக்

காணும் வரை

தேடுதல்


கடத்தல் கொலை கொள்ளை
குண்டுவெடிப்பு கோர விபத்து
கும்பலாய் கற்பழிப்பு
குடும்பத்தோடு தற்கொலை என
வாகனத்தில் மிக வேகமாய்
ஊடகப் பசிக்காக தீனி தேடியவனின்
கைப்பேசி சிணுங்க...
தேடுதல் தொடர்ந்ததா முடிந்ததா  
நாளை தான் தெரியும்