காதலை அங்கீகரிப்போம்


காதலித்து மணமுடிப்பதில் உள்ள சுகமே தனி தான். நாம் விரும்பிய ஒரு நபருடன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.

காதல் எப்படி உருவாகிறது? ஒரு பெண்ணோ அல்லது ஒரு பையனோ, தங்களது சிறு வயதில் தங்களை ஈர்த்த ஒரு விஷயம் தன எதிர் பாலினத்திடம் காணும் போது, மனதில் ஒரு வகை கிளர்ச்சியை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு ஒருவரின் உடை, பேச்சு, பேசும் போது ஆடும் ஜிமிக்கி, சில குறும்புத் தனங்கள், முடி, கண்கள், மூக்கு, சிரிப்பு, கன்னத்திலோ தாடையிலோ விழும் குழி இப்படி ஏதாவது ஒரு மிகச் சாதாரண அற்ப விஷயமே அவர் பால் இன்னொருவரை ஈர்க்க வைக்கிறது. பிறகு அதுவே அவரிடம் வலியச் சென்று பழகத் தூண்டுகிறது. அதை போகப் போக காதல் என்று இருவரும் உணர்கிறார்கள். சிலர் திருமணம் வரை நகர்த்தி பெற்றோரின் சம்மதத்தோடோ அல்லது அவர்களை மீறியோ வெற்றி பெறுகிறார்கள்.

ஆக கண்டதும் வருவது தான் காதல். இருவரும் பேசி, புரிந்து, வருவது எல்லாம் காதல் அல்ல. அது கிட்டத்தட்ட பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் வழக்கமான திருமணம் போல் ஒன்றே ஆகும்.
காதல் திருமணம் புரிந்தோர் எல்லாத் தருணங்களிலும் மகிழ்வோடு தான் இருப்பர் என்று எண்ண வேண்டாம். கோபதாபங்களும் சண்டைகளும் சமரசங்களும், விட்டுக் கொடுத்தலும் அங்கேயும் இருக்கும்.

பெற்றோர் சம்மதத்தோடு நடைபெறும் எந்த திருமணம் ஆனாலும் அது வழக்கமான திருமணமாக இருக்கலாம் அல்லது காதல் திருமணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பெரியவர்கள் அமைத்துக் கொடுத்த வாழ்க்கையில் , எந்த பிரச்சினை வந்தாலும் நம்மைச் சுற்றிய உறவுகள் நம்மை அனுசரித்து போகவே வலியுறுத்துகிறது. அங்கே பாதிக்கப்படும் நபர் பொருளாதாரத்தில் சற்று வலிமை எனில் திருமண பந்தத்தை விட்டு தைரியமாய் வெளியேறி விடக் கூடும். அப்படி இல்லை எனில் மருகி மருகி சுயசமாதானம் செய்து வாழ்க்கையை நகர்த்த பழகிக் கொள்கிறது.

பின் காதல் திருமணத்தில் என்ன வேறுபாடு என்றால், நமக்கு பிடித்த ஒரு நபரோடு வாழ்கிறோம் என்ற ஒரு மன திருப்தியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.

என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு முறை மட்டும் கிடைத்த இந்த குறுகிய வாழ்க்கையில், நமக்கு பிடித்த ஒரு நபரோடு வாழும் வாய்ப்பு கிடைத்தால் அது அவர்களின் பெரும் பேறு என்பேன். ஏனெனில் அது எல்லோருக்கும் வாய்ப்பதுமில்லை; அப்படி வாய்ப்பு பெற்றவர்களையும் இந்த சமூகம் அவ்வளவு எளிதில் அங்கீகரிப்பதுமில்லை.

நாமாவது நம் சந்ததியினரின் காதலை அங்கீகரிப்போம்.